அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், பள்ளிப் பேருந்து ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், மாணவர்கள் காட்டிய அபாரத் துணிச்சலும், சமயோசித புத்தியும் ஒரு பெரும் விபத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளன.
அதாவது லியா டெய்லர் என்ற ஓட்டுநர், புதன்கிழமை காலை மாணவர்களைப் பேருந்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் பேருந்தின் ஸ்டீயரிங்கிலேயே சரிந்து விழுந்தார்.
டிரைவர் மயங்கிய நிலையில், பேருந்து கட்டுப்பாடின்றிச் சாலையில் ஓடத் தொடங்கியது. பேருந்தின் முன்புறம் அமர்ந்திருந்த மாணவர் ஒருவர், நொடிப்பொழுதில் நிலைமையை உணர்ந்து ஓடிச் சென்று ஸ்டீயரிங்கைப் பிடித்துப் பேருந்தைச் சீராகச் செலுத்தினார். இடையில் ஓட்டுநர் லியா சிறிது கண் விழித்தாலும், மீண்டும் மயங்கி பின்னோக்கிச் சரிந்தார்.
பேருந்தில் பதற்றம் நிலவினாலும், மாணவர்கள் நிதானம் இழக்கவில்லை. ஒரு மாணவர் டிரைவர் சீட்டிற்குச் சென்று பிரேக்கை அழுத்திப் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினார். மற்றொரு மாணவர் ஓட்டுநர் கையில் வைத்திருந்த ஆஸ்துமா மருந்தைத் தேடி எடுத்து அவருக்குக் கொடுத்தார். அதே சமயம் மற்ற மாணவர்கள் உடனடியாகத் தங்கள் செல்போன் மூலம் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

