மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அமெரிக்க மக்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
"உலகம் இப்போது ஒரு முக்கியமான சந்திப்பில் நிற்கிறது" என்று எச்சரித்துள்ள அவர், மோதலா அல்லது பேச்சுவார்த்தையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்குவது இல்லை என்றும், தற்காப்புக்காக மட்டுமே பதிலடி கொடுப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 1953-ல் நடந்த சதி முதல் தற்போது வரை அமெரிக்கா ஈரானுக்கு எதிராகச் செய்துள்ள தடைகள் மற்றும் தாக்குதல்களைப் பட்டியலிட்டுள்ள அவர், இத்தனை நெருக்கடிகளையும் தாண்டி ஈரான் இன்று தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறையில் பல மடங்கு வலிமை பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, ஈரான் போர் நிறுத்தத்தைக் கோருவதாக டிரம்ப் சமூக வலைதளங்களில் பதிவிட்டது முற்றிலும் பொய் என்றும், அது அடிப்படையற்றது என்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதை இந்தக் கடிதம் சூசகமாக உணர்த்தினாலும், ஈரானின் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் புதிய உச்ச தலைவர் மஜிதபா காமேனியிடமே உள்ளது.
பிரிட்டன் போன்ற நட்பு நாடுகள் அமெரிக்காவை கைவிட்டு வரும் நிலையில், டிரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
போர் நீடித்தால் அது வரும் தலைமுறையினரைத் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், அமெரிக்க மக்கள் தங்கள் அரசைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என பெஷேஷ்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

