மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலில், அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதில் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் அதிநவீன F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் இருந்த இருவரில் ஒருவரை அமெரிக்க சிறப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால், மற்றொரு விமானியின் நிலை குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. ஈரானியப் படைகளும் அந்த விமானியைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், குவைத் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் A-10 வார்தாக் (A-10 Warthog) என்ற மற்றொரு போர் விமானமும் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இதில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பியதாகவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானிகளை மீட்கச் சென்ற அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள் மீதும் ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இருப்பினும், அந்த ஹெலிகாப்டர்கள் எவ்வித சேதமுமின்றி ஈரானிய வான்பரப்பில் இருந்து வெளியேறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து வெள்ளை மாளிகையோ அல்லது பென்டகனோ இதுவரை விரிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. எனினும், அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் இது குறித்து விளக்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து NBC செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "இது போர்ச் சூழல். இதுபோன்ற சம்பவங்கள் இருதரப்பு ராஜதந்திர பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது" என்று சுருக்கமாகக் கூறினார். சில நாட்களுக்கு முன்புதான், ஈரானின் வான்பரப்பு அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

