மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வந்த்ரி ஏரி நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குப் பயங்கரமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆபத்தை உணராமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பல குடும்பங்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது, வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்வரத்து அதிகரித்து, காட்டாற்று வெள்ளம் போல் சேறு கலந்த நீர் சீறிப் பாய்ந்து வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அமைதியாக இருந்த அந்த இடம், அச்சுறுத்தும் அபாயகரமாக மாறியது. திடீரென நீர்மட்டம் உயர்ந்து பலத்த நீரோட்டம் ஏற்பட்டதால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.
ஆபத்தான அந்தச் சூழலில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, தண்ணீரின் பலத்த இழுவைக்கு எதிராகப் போராடி பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர முயன்றனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும் அலறல் சத்தமும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாகச் செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டனர். ப
ருவமழைக் காலத்தில் நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்குக் காவற்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

