தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது விஜய்க்கு காங்கிரஸ் கட்சியின் அங்கவஸ்திரத்தை (துண்டு) தலைவர்கள் அணிவித்தனர்.
தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணியின் தொடக்கமாக இது பார்க்கப்படும் வேளையில், மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் துண்டைத் தனது தோளில் சிறிது நேரம் விஜய் அணிந்திருந்தார். தவெக மாநாட்டிற்குப் பிறகு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பேசப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் இந்தத் திடீர் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

