இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஆற்றிய உரை ஒட்டுமொத்த தெற்காசியாவையே உற்றுப்பார்க்க வைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்குப் பதிலளித்த அர்ச்சுனா, "கச்சத்தீவை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? முழு யாழ்ப்பாணத்தையுமே தமிழகத்திடம் எழுதி கொடுத்துவிடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் எங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கச்சத்தீவைத் தர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி வரும் நிலையில், ஒரு தமிழ் எம்.பி-யே இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. "தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய்க்கு, ஒரு அடக்கப்பட்ட தமிழனாக எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்ட அவர், ஈழத் தமிழர்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவராக விஜய் உருவெடுத்துள்ளதாகப் புகழாரம் சூட்டினார். எல்லையைத் தாண்டி விஜய்க்கு கிடைத்துள்ள இந்த ஆதரவு, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

