கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் அணியின் முக்கிய பவுலராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகள் தோல்வி அடைந்து இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் 8வது இடத்தில் உள்ளது. இனி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் மீதமுள்ள அனைத்து போட்டியிடிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பேட்டிங் விட மும்பை அணியின் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது.
அணியின் பிரைம் பவுலராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இது அவரது ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையாக அமைந்தது. மேலும் இந்த தொடரில் மொத்தமாக இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி தடுமாறி வருவது குறித்து ஸ்ரீகாந்த் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது "பும்ரா கூட இப்போது மெதுவான பந்துகளை அதிகமாக வீச ஆரம்பித்து விட்டார். உங்கள் கையில் புதிய பந்து இருக்கிறது உங்களுக்கு எதிராக இரண்டு இடது கை வீரர்கள் இருக்கிறார்கள். எனவே வேகமாக வீசி அவர்களை ஆட்டம் இழக்க வைக்க முயற்சிக்க வேண்டும். புதிய பந்துகளைக் கொண்டு மெதுவான வேகத்தில் வீசுவதால் எந்த பயனும் இல்லை.
கடந்த போட்டிகளில் ஆர்ச்சர் என்ன மாதிரி பந்து வீசுகிறார் என்பதை கவனியுங்கள். அவர் வேகமாக வீசி பேட்ஸ்மேன்களை எட்ஜ் முறையில் ஆட்டம் விலக வைக்கிறார். விக்கெட் கீப்பர் மற்றும் ஸ்லிப் ஃபில்டர்களிடம் பேட்டர்கள் ஆட்டம் இழக்கிறார்கள் எனவே அதையே பும்ரா முயற்சிக்க வேண்டும். ஆனால் தற்போது இவரிடம் அந்த வேகம் சுத்தமாக இல்லை, மிகவும் சோர்வாக இருப்பது போல உணர்கிறேன். இன்னும் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை" என்று பேசி இருக்கிறார்.

