நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சமீர் ரிஸ்வியின் அதிரடியான ஆட்டத்தால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இவரது ஆட்டம் குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. முற்றிலும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில் மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். இந்த சூழ்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணிக்கும் தொடக்கத்தில் கேஎல் ராகுல் மற்றும் நித்திஷ் ராணா விரைவில் வெளியேறினார்கள்.
அதற்குப் பிறகு நிஷாங்கா உடன் ஜோடி சேர்ந்த இந்திய இளம் வீரர் சமீர் ரிஸ்வி, மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 51 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 90 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் அஸ்வின் இவரை குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது "நான் சமீர் ரிஸ்வி பற்றி பேச விரும்புகிறேன். அவர் தற்போதைய எப்பேர்ப்பட்ட சிறந்த பேட்ஸ்மேன் ஆக மாறி இருக்கிறார். நாம் திறமையாளர்களை கண்டறிவது பற்றி பேசுகிறோம். ஒரு குறிப்பிட்ட வீரர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம். பின்னர் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும்போது நாம் அவருக்காக மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வீரர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிஎஸ்கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுமாரான ஆட்டங்களில் வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த ஆட்டங்களிலேயே அவர் ஜொலித்திருந்தார். ஆனால் சிஎஸ்கே அவரை விடுவித்தது. கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகு மூன்று அல்லது நான்கு கோடி ரூபாய்க்கு அவரை தக்க வைத்திருக்க முடியும். ஆனால் அதை சிஎஸ்கே செய்யவில்லை. இதில் டெல்லி அணி 95 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியது. அவர் மீது முதலீடு செய்த தொகையை 100% திரும்பப் பெற்று விட்டது என்று கூறலாம். அவர் நேற்று பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்போது வேறு ஏதோ ஆடுகளத்தில் அவர் விளையாடியது போன்று உணர்வை கொடுத்தது" என்று பேசியிருக்கிறார்.

