இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேப்பிடல்ஸ் டாஸ் வெல்ல மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
தவறாக கணித்து விட்டேன்
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல் அணிக்கு சமீர் ரிஸ்வி 51 பந்தில் 90 ரன்கள் எடுக்க அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது.
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது " இந்த ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சரியாகவே இருந்தது. இந்த குறிப்பிட்ட ஆடுகளத்தில் நாங்கள் ஒரு 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்"
இதுதான் முக்கிய காரணம்
"மிகக்குறிப்பாக நான் 16ஆவது ஓவரில் ஆட்டம் இழந்து விட்டேன். நமன் இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுது ஆட்டம் இழந்து விட்டார். நாங்கள் இருவரும் கடைசிவரையில் விளையாடியிருந்தால் 185 ரன்கள் எடுத்திருப்போம். மேலும் அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் செய்ததை நாங்களும் செய்ய முயன்றோம். ஆனால் எங்களால் முடியவில்லை"
"அதே சமயத்தில் சமீர் ரிஸ்வி மிக அருமையாக விளையாடினார். அவர் விளையாடியதற்கான கிரெடிட் அவருக்கு கொடுக்கப்பட வேண்டும். போட்டியை எங்களிடமிருந்து எடுத்துச் சென்று விட்டார். இந்த போட்டியில் ஏற்பட்ட தவறை திருத்திக் கொண்டு அடுத்த போட்டிக்கு வருவோம்" என்று கூறியிருக்கிறார்.

