சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜுக்கு கேப்டன்சி பொறுப்பை சரிவர கையாள தெரியவில்லை என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ப்ரியன்ஸ் ஆர்யா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது ருதுராஜ் என்ன செய்வது என்று தெரியாமல் களத்தில் நின்றதாக அவர் கூறியிருக்கிறார்.
ருதுராஜ் பிரச்சனை
சிஎஸ்கே அணியின் கேப்டன் ஒரு ருதுராஜ் பந்துவீச்சாளர்களை சுழற்றி பயன்படுத்துவதில் பின்தங்கி இருக்கிறார் என்கின்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக அவர் ஸ்பின்னர்களை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று தெரியாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, முதல் போட்டியில் மேத்யூ ஷார்ட் விளையாட வைக்கப்பட்டார். அவர் ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டராக இருந்தும் ஒரு ஓவருக்கு கூட அவரை பயன்படுத்தவில்லை. இந்த போட்டியில் அவர் இடத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரசாந்த் வீர் ஸ்பின் ஆல்ரவுண்டர். அவரையும் ஒரு ஓவருக்கு கூட பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ருதுராஜ் சரியில்லை
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது "பிரியன்ஸ் ஆர்யா தாக்குதலால் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்து விட்டார்கள். அவர் வெறும் 11 பந்தில் 31 ரன்கள் எடுத்து போட்டியை மொத்தமாக மாற்றி விட்டார். அந்த நேரத்தில் ஒரு கேப்டனாக பவுலர்களில் யாரை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் ருதுராஜ் நின்று கொண்டு இருந்தார்"
"மேலும் முதல் போட்டியில் மேத்யூ ஷார்ட் ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதேபோல பிரஷாந்த் வீர் ஜடேஜாவுக்கு ரீப்ளேஸ்மென்ட் என கொண்டு வந்தார்கள். அப்படி இருக்கும் பொழுது அவருக்கும் ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. இவர் எப்படி ஜடேஜாவுக்கு மாற்றாக இருக்க முடியும்? ருதுராஜ் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் பலவீனமாக இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

