நேற்று சிஎஸ்கே அணி சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் டிரேடிங் மூலம் சிஎஸ்கே அணிக்கு கொண்டுவரப்பட்டார். டி20 உலக கோப்பையில் சிறப்பாக அவர் செயல்பட்டதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக அவர் சரியாக விளையாடவில்லை.
இதை வைத்து முடிவு செய்ய முடியாது
மேலும் தற்போது சிஎஸ்கே அணியில் பினிஷர் தோனி மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் தென் ஆப்பிரிக்காவின் பிரிவிஸ் இருவரும் இல்லாதது பின்னடைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸ்டீபன் பிளமிங் பேசும்பொழுது "இது டி20 கிரிக்கெட். ஒரு பேட்ஸ்மேன் களம் இறங்கும் ஒவ்வொரு முறையும் எடுக்க முடியாது. அவர் எட்ஜ் எடுத்து ஆட்டம் இழந்து விட்டார். ஆனால் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் ரிதமுக்கு வந்துவிட்டால் போட்டியை தனியாக வென்று விடுவார். எனவே வெறும் இரண்டு போட்டிகளை வைத்துக்கொண்டு அவரை முடிவு செய்யக்கூடாது"
240 ரன் அடிக்க முடியும்
"தற்போது டி20 கிரிக்கெட் மிகவும் மாறிவிட்டது. ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி இறுதியில் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்யக்கூடிய நிலைமை இல்லை. ஓவருக்கு 10 முதல் 11 ரன்கள் தொடர்ந்து எடுக்கக்கூடிய நிலையில் டி20 கிரிக்கெட் இருக்கிறது. இதை நாமும் செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறோம்"
"தற்போது எங்கள் அணியில் பினிஷர் தோனி வெளியில் இருக்கிறார். மிடில் ஆர்டரில் விளையாடும் டிவால்ட் பிரிவிஸ் வெளியில இருக்கிறார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். தற்போது 240 ரன்கள் எடுக்கும் திறமை எங்களுக்குள் இருக்கிறது. அவர்கள் வரும்பொழுது எல்லாம் மாறும்" என்று கூறியிருக்கிறார்.

