Wednesday, 04 Jul, 7.53 am தமிழகம்

திருவண்ணாமலை
ஆரணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: அதிமுகவினர் கொண்டாட்டம்

ஆரணியில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டு சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியானதால், ஆரணியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வாழும் பொதுமக்கள் தங்கள் போக்குவரத்து தொடர்பான பணிகளை சிரமமின்றி மேற்கொள்ளும் வகையில், ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்த தமிழக முதல்வரிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் தரம் உயர்த்தப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், இதற்காக ரூ.87.22 லட்சம் ஒதுக்கீடு செய்தும் அறிவித்தார்.
தொடர்ந்து, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் முதல்வர், துணை முதல்வர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோருக்கு அதிமுகவினர் நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பியும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதில், அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகரச் செயலர் அசோக்குமார், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், அனைத்திந்திய ஓட்டுநர் பேரவை மாநிலத் தலைவர் சி.குணா, ஆரணி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் ராஜா, பழனி, சரவணன், முனீர், சங்கர், நூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Tamil Nadu
Top