நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மயிலாடுதுறை நகரைச் சேர்ந்த 7 பேரில் 6 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்களது உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
எனினும், மயிலாடுதுறை தில்லைநகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்காததால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கும்பகோணத்தில் இருந்து திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்காக கடந்த 23-ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், 3 பேருந்துகளில் சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் நேபாளம் வழியாக யாத்திரை மேற்கொண்ட நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த சுற்றுலா குழுவில் மயிலாடுதுறை நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன், ரத்தினகுமார், பூங்குழலி, புஷ்பலதா, ராஜேஸ்வரி, ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் மற்றும் மணிமேகலை ஆகிய 7 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இதையடுத்து மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன், சம்பந்தப்பட்டவர்களின் முகவரிகள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களை சேகரித்து, அவர்களது வீடுகளுக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
செட்டித் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் குறித்து அவரது உறவினர்களிடம் கேட்டபோது, செல்போன் மூலம் அவரை நேரடியாக தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், நீதிமன்றம் மூலமாக தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தனர். அவர் நேபாளில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுற்றுலா சென்ற 7 பேரில் 6 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், மயிலாடுதுறை தில்லைநகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் தற்போதைய நிலை குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
இதற்கிடையில், மணிமேகலையின் கணவர் சுகுமார் கூறுகையில், காலை சுமார் 11 மணியளவில் எனது மனைவி, மகளுக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு முன்பாகவே நாங்கள் தங்கிவிட்டோம் என்று கூறினார். இதனால் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்றார்.
ராஜேஸ்வரி குறித்து தகவல் பெறுவதற்கான முயற்சிகளை மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மயிலாடுதுறை நகரைச் சேர்ந்த 7 பேரில் 6 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்களது உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும், மயிலாடுதுறை தில்லைநகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்காததால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

