தமிழ்நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனங்கள் நடைபெறுவதாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வழக்கறிஞர் நியமனத்தைப் பொறுத்தவரை, அரசு நேர்மையாக செயல்படும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவரும், தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த தாம், தவெக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின்படி, மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 29 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகலிலேயே நியமனப் பட்டியல் வாட்ஸ்அப் மூலம் பரவியதாகவும், இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மோகன்ராஜிடம் கேட்டபோது, "அதுதான் இறுதிப் பட்டியல்" எனக் கூறியதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட ஆட்சியர் மற்றும் தவெக துச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் நடைபெற்றதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல்களை அனுமதிக்க மாட்டேன் என்று தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், சட்டத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மனுதாரர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் விஜய்க்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கும் வாய்ப்பு வழங்கி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை அரசின் நியமன அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு, அரசு வழக்கறிஞர் நியமனத்தைப் பொறுத்தவரை அரசு நேர்மையாக செயல்படும் என நீதிமன்றம் நம்புவதாகக் கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனங்கள் நடைபெறுவதாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்தைப் பொறுத்தவரை, அரசு நேர்மையாக செயல்படும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

