வாழப்பாடி அருகே குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்த நிலையில், உடலைப் பாக்குத் தோட்டத்தில் புதைத்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்ற கட்டிட மேஸ்திரி, கடந்த சில நாட்களாக மாயமானதாக அவரது மனைவி வினோதினி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த 23-ஆம் தேதி மணிகண்டன் தனது தாய் ஜோதியிடம் குடிக்கப் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஜோதி தனது மகனைத் தள்ளிவிட்டதில், தலையின் பின்புறம் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகனின் மரணத்தை மறைக்கத் திட்டமிட்ட தாய் ஜோதி, கணவர் சின்னப்பன் மற்றும் உறவினர் வீரமுத்து ஆகியோரின் உதவியுடன் மணிகண்டனின் உடலைத் தனது பாக்குத் தோட்டத்தில் ரகசியமாகப் புதைத்துள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் நாகலட்சுமி மற்றும் டிஎஸ்பி சபரிநாதன் முன்னிலையில் மணிகண்டனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மகனைப் படுகொலை செய்து உடலை மறைத்த குற்றத்திற்காக தாய் ஜோதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

