திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்பத் தகராறில் மாமனார் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ரவி என்பவர் மாட்டு வண்டி ஓட்டித் தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இவரது மகள் பிரீத்தி, அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சதீஷ் (33) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், முதல் மனைவியைப் பிரிந்து பிரீத்தியை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு நான்கு வயது மற்றும் நான்கு மாதங்களில் இரு குழந்தைகள் உள்ளனர்.
சதீஷ் மது பழக்கத்திற்கு அடிமையானதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பிரீத்தி, தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியதுடன், சதீஷிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய விரும்பி விவாகரத்து நோட்டீஸும் அனுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதீஷ், நேற்று மதுபோதையில் தனது மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தட்டிக் கேட்ட மாமனார் ரவிக்கும் மருமகன் சதீஷிற்கும் இடையே மோதல் வெடித்தது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தனது வீட்டிற்குச் சென்ற சதீஷ், அங்கு சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து மாமனார் ரவியை நோக்கிச் சுட்டுள்ளார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் ரவி இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்துத் தகவலறிந்த உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சதீஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கொலையாளி சதீஷ், திமுக கிளைச் செயலாளர் குமுதா வெங்கடேசனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சட்டவிரோத ஆயுதங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்துவதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

