திண்டுக்கல் மாவட்டம் நத்தம், காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை மற்றும் உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரண்டே மாதங்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மாபெரும் நிதி மோசடி அரங்கேறியுள்ளது.
FQL Exchange மற்றும் VG Investment ஆகிய போலி செயலிகள் மூலம் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, சுமார் 15,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து ரூ. 30 கோடிக்கும் மேல் ஒரு கும்பல் ஏமாற்றியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட காசம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் குமரேசன் மேற்பார்வையில், ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வி தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இந்த மோசடியின் முக்கிய குற்றவாளிகளான ரமேஷ், அவரது மனைவி அனிதா மற்றும் விஜய் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய தீனதயாளன், பிரியதர்ஷினி, ரஞ்சித் மற்றும் அருண் உள்ளிட்ட தலைமறைவாக உள்ள பிற எதிரிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 7,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ள நிலையில், எஞ்சிய குற்றவாளிகளையும் விரைவாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறையினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
எந்தவொரு சட்டபூர்வ நிதி நிறுவனமும் குறுகிய காலத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியாது என்பதால், பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாத APK லிங்குகள் மூலம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும், இதுபோன்ற நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தையோ, மாவட்ட குற்றப்பிரிவையோ அல்லது சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐயோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

