மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 3 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காகச் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி செயல்பாட்டுச் சிந்தனை (Computational Thinking) சார்ந்த புதிய பாடத்திட்டத்தைப் புதன்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
நவீன உலகிற்கு ஏற்ப மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆழமான மற்றும் முறையான புரிதலைப் பள்ளிப் பருவத்தின் தொடக்கத்திலேயே அவர்களுக்கு வழங்குகிறது.
வேகமாக மாறிவரும் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில், மாணவர்கள் வெறும் பயனாளர்களாக மட்டுமல்லாமல், புதிய கண்டுபிடிப்பாளராக உருவெடுக்க இந்த அணுகுமுறை வலுவான அடித்தளத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பக் கல்வியிலேயே ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வது, எதிர்கால சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளவும், தொழில்நுட்பத் துறையில் சர்வதேச அளவில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கவும் பெரும் உறுதுணையாக இருக்கும் என்று கல்வித் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

