Dailyhunt
"4 வருஷம் ஜெயில்ல இருந்தவ.. இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்".. சதித்திட்டங்களை உடைத்து மதுரையில் கர்ஜித்த சின்னம்மா.!

"4 வருஷம் ஜெயில்ல இருந்தவ.. இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்".. சதித்திட்டங்களை உடைத்து மதுரையில் கர்ஜித்த சின்னம்மா.!

Tamizhan media 3 days ago

மிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அஇபுதமமுக கட்சித் தலைவி சசிகலா மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள அவர், மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளர் சக்கரவர்த்திக்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 50 சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை என்றும், தற்போது மீண்டும் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றப் பார்ப்பதாகவும் காட்டமாக விமர்சித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தெரியாத அரசாக திமுக உள்ளது என்றும் அவர் சாடினார்.

தனது உரையில் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து ஆவேசமாகப் பேசிய சசிகலா, அந்தப் பேரியக்கத்தில் துரோகிகள் அதிககிவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்தவர்கள் கூட இன்று கட்சித் தாவலில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜெயலலிதா இருந்த காலத்தில் இத்தகைய சூழல் நிலவியது இல்லை என்றார். மேலும், நன்னிலம் தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்ட இளைஞரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கடத்தியதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் திமுக அரசும் அதிமுகவும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார். தனது தேர்தல் பிரச்சாரத்தை முடக்கப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

எதிர்ப்புகள் குறித்தும், சிறைவாசம் குறித்தும் துணிச்சலாகப் பேசிய சசிகலா, “நான் எதற்கும் அஞ்சும் ஆள் கிடையாது” எனச் சூளுரைத்தார். ஜெயலலிதாவுடன் 35 ஆண்டுகாலம் அரசியல் களத்தில் பல போராட்டங்களைச் சந்தித்துள்ள தனக்கு, நான்கு ஆண்டு கால சிறைவாசம் ஒன்றும் பெரிய தடையல்ல என்றும், மிரட்டல்களுக்குப் பயந்து ஒதுங்கிப் போகமாட்டேன் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். அதிமுகவில் உள்ள துரோகிகளுக்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் முடிவு கட்டவே தான் தேர்தல் களத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எத்தனை சலசலப்புகள் வந்தாலும் அதைப் பார்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தனது பேச்சின் மூலம் அரசியல் எதிரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media