தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று ஸ்மார்ட்போன்களும் இணையமும் இளைஞர்களைக் கட்டிப்போட்டுள்ள நிலையில், உலகெங்கும் டேட்டிங் செயலிகள் மூலம் துணையைத் தேடும் கலாசாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக இருந்த ‘சாட்டிங்’ மற்றும் ‘டேட்டிங்’ போன்ற சொற்கள் இன்று மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் சாதாரணமானவையாக மாறிவிட்டன. நவீன காலத்தில் உறவுகளை எளிதாக்கும் நோக்கில் உருவான இந்த செயலிகள், தற்போது திருமணத்திற்கு அப்பாற்பட்ட அல்லது கள்ளத்தொடர்புகளுக்கும் அதிகளவில் வழிவகுக்கத் தொடங்கியுள்ளன.
சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் சுமார் 40 லட்சம் பேர் இத்தகைய டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்; இதில் 65 சதவீதம் ஆண்களும், 35 சதவீதம் பெண்களும் அடங்குவர். இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், பயனர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களின் பங்களிப்பு 148 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் தான். பயனர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 1 முதல் 1.5 மணி நேரம் வரை இதில் செலவிடுகின்றனர். குறிப்பாக, மதியம் 12 முதல் 3 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் இந்த உரையாடல்கள் உச்சத்தை எட்டுகின்றன.
விருப்பங்களைப் பொறுத்தவரை, ஆண்கள் 25 முதல் 30 வயதுடைய பெண்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதே சமயம், 30 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்களை விரும்பும் பெண்கள், குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் போன்ற பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் உள்ளவர்களையே அதிகம் நாடுகின்றனர். இந்தியாவின் நகரங்களைப் பொறுத்தவரை, டேட்டிங் செயலி பயன்பாட்டில் 18 சதவீதத்துடன் பெங்களூரு முதலிடத்திலும், ஐதராபாத் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

