விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டியைச் சேர்ந்த சிவாவும், செவல்பட்டியைச் சேர்ந்த வாசக தேவியும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலித்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால், திருமணமான ஒரே வாரத்திலேயே இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. சிவாவின் அதீத மதுப்பழக்கமும், தினமும் அவர் செய்து வந்த தகராறும் வாசக தேவிக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் கணவரைப் பிரிந்த அவர், செவல்பட்டியில் உள்ள தனது தாய் சாந்தியின் வீட்டிற்குச் சென்று அவருடனேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கடுமையான மதுபோதையில் மாமியார் வீட்டிற்குச் சென்ற சிவா, மனைவி வாசக தேவியை வலுக்கட்டாயமாகத் தன்னுடன் வருமாறு இழுத்துத் தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாமியார் சாந்தியும், அவரது மகன் சாமி முருகனும் வாசக தேவியைக் காப்பாற்ற சிவாவைத் தடுத்துள்ளனர். அப்போது கடும் ஆத்திரமடைந்த சிவா, தான் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த சாமி முருகன் மீட்கப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்த சூலக்கரை காவல் துறையினர், சாந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் தப்பியோட முயன்ற சிவாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழாமல் இருப்பதற்கு மாமியார் சாந்திதான் தடையாக இருக்கிறார் என்ற கோபத்தில், அவரைத் தீர்த்துக்கட்டும் நோக்கத்துடனேயே கத்தியுடன் வந்ததாக சிவா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மனைவியை அழைக்க வந்த இடத்தில் மருமகனே மாமியாரைக் குத்திக்கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

