கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெறும் 70 நிமிட இடைவெளியில் 14 முக்கிய இடங்களில் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
இந்த கோரமான சங்கிலித் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 அப்பாவி பொதுமக்கள் தங்களின் உயிரை இழந்தனர்; 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மனிதநேயமற்ற முறையில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவமனைகளையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. 2002 குஜராத் கலவரத்திற்கு பழிவாங்கும் நோக்கில், தடை செய்யப்பட்ட ‘சிமி’ அமைப்பின் ரகசிய முகாமில் திட்டமிடப்பட்டு, ‘இந்தியன் முஜாஹிதீன்’ பயங்கரவாத அமைப்பால் இந்த சதிச்செயல் அரங்கேற்றப்பட்டது வழக்கு விசாரணையில் அம்பலமானது.
இந்த கொடூர வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இதனை ‘அரிதினும் அரிதான வழக்கு’ என வகைப்படுத்தி, 2022 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த கடுமையான தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஓய்.காக்ஜே மற்றும் சமீர் தவே ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்து, சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனைகளையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளின் துணிகரமான மற்றொரு குற்றச்செயலும் வெளிச்சத்திற்கு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் 24 பேர், அங்கிருந்து தப்பிப்பதற்காக சுமார் 213 அடி நீளத்திற்கு ரகசிய சுரங்கம் தோண்டிய அதிர்ச்சி உலகிற்கு தெரியவந்தது. எனினும், சிறைத்துறையினரின் தீவிர கண்காணிப்பால் இந்த சுரங்கப் பாதை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் தப்பிக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டது. தற்போது உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இறுதித் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள மிக முக்கியமான நீதியாகப் பார்க்கப்படுகிறது.

