பாாசில்கா மாவட்டம் ஜந்த்வாலா மீரா சங்லா கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் (42) என்பவர், தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், மீண்டும் இணைந்து வாழலாம் எனக் கூறி சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த குர்மீத், கூர்மையான ஆயுதத்தால் சரோஜைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை வயல்வெளியில் புதைத்துள்ளார். கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன், இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை சரோஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்; அதில் குர்மீத் வெற்றிச் சின்னத்தைக் காட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கொலை நடந்த இடத்திற்கு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் சரோஜின் அலறல் சத்தத்தைக் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். யாரோ வருவதை உணர்ந்த குர்மீத் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆடு மேய்ப்பவர் கொடுத்த தகவலின் பேரில் கிராம மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், புதைக்கப்பட்ட சரோஜின் உடலைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக ஃபாசில்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த குர்மீத் சிங்கைத் தீவிரமாகத் தேடி, இறுதியில் கிராமத்திலேயே அவரை வலைவீசிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திட்டமிட்டே சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இக்கொடூரக் குற்றத்தைச் செய்தது உறுதியானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

