உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் மனைவி குழந்தைகளை தந்தையே தீ வைத்து கொன்ற சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.
தன் மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தையை காரில் வைத்துப் பூட்டி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளான் கொடூர மனம் படைத்த டான் சிங் என்ற நபர். இந்தக் கொடூரச் செயலில் அந்தப் பிஞ்சு குழந்தை கார் உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தது. தீக்காயங்களுடன் உயிருக்குத் போராடிய தனது மனைவியை (காவல் துறையில் காவலராகப் பணியாற்றுபவர்), மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி காரில் ஏற்றிய அந்த நபர், வழியில் சுத்தியலால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு விபத்து போல நாடகமாடிய டான் சிங், தனது காரை ஒரு டம்பர் லாரி மோதிவிட்டதாகக் கூறி தப்பிக்க முயன்றார். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையும் காவல்துறையின் தீவிர விசாரணையும் இந்தத் திட்டமிட்டப் படுகொலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்கும், வேறொரு பெண்ணுடன் தனக்கிருந்த தொடர்பால் மனைவியை ஒழித்துக் கட்டுவதற்கும் அவர் இந்தத் துரோகத்தைச் செய்தது தெரியவந்துள்ளது. தற்போது டான் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; இந்தச் சம்பவம் ஒரு குடும்பத் தலைவனே காலனாக மாறிய உச்சக்கட்ட அவலமாகும்.

