இண்டிகோ விமானத்தில் குடும்பத்துடன் ஏறி, இருக்கைகளுக்கு இடையே தங்களின் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவுகளைப் பரிமாறிக்கொண்டு 'பிக்னிக்' போன்று கொண்டாடிய ஒரு குடும்பத்தின் காணொளி இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் குறுகிய இடவசதியைப் பொருட்படுத்தாமல், பலகாரங்கள் மற்றும் தின்பண்டங்களை ஒரு பெரிய விருந்து போலப் பரிமாறிக்கொண்ட இவர்களின் செயல் சமூக வலைதளங்களில் பலத்த எதிர்வினைகளைச் சம்பாதித்துள்ளது.
இந்தக் காணொளிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையவாசிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர். விமானங்களில் சொந்தமாக உணவு எடுத்துச் செல்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்றும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதில் என்ன தவறு என்றும் ஒரு தரப்பினர் இவர்களை ஆதரித்து வாதிடுகின்றனர். ஆனால், மற்றோரு தரப்பினரோ இது பொது இடத்துக்கான நாகரிகம் அற்ற செயல் என்றும், விமானத்தின் வரையறுக்கப்பட்ட இடத்தினுள் இவ்வாறு பெரிய அளவில் உணவுப் பொருட்களைப் பரப்புவது மற்ற பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இறுதியில் அந்தப் பெண் தன் இருக்கைப் பகுதியிலுள்ள குப்பைகளை ஒரு பெரிய பையில் சேகரித்துச் சுத்தம் செய்தாலும், இந்தச் சம்பவம் விமானப் பயணத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்தான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரயில்களைப் போல விமானங்களிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முறையா என்ற கோணத்தில் இந்த விவாதம் தற்பொழுது இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

