ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஒரு மாத காலத் தாக்குதலில் ஈரானின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, ஈரானின் கடற்படை, வான்படை மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஆகியவை பலவீனமாக்கப்பட்டுள்ளதாகவும், ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் உள்ளிட்ட முக்கிய ராணுவ இலக்குகளை அமெரிக்கா வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து எச்சரித்த ட்ரம்ப், வரும் இரண்டு மூன்று வாரங்களில் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று கூறினார். ஈரானின் ஆற்றல் உட்கட்டமைப்புகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்த ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டில் முடியாவிட்டால் அந்நாட்டின் மின்சாரக் கட்டமைப்புகள் முழுமையாக முடக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். ஈரானை “கற்காலத்திற்கே கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்த ட்ரம்ப், அமெரிக்கப் படைகள் தங்களது இறுதி இலக்கை மிக விரைவில் எட்டும் எனத் தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்மஸ் நீர்வழிப்பாதையின் பாதுகாப்பு குறித்துப் பேசிய ட்ரம்ப், இந்தப் பாதையை ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க நட்பு நாடுகள் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஈரானின் ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல்களை மட்டுப்படுத்துவது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகப் பாதுகாப்பிற்கும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்த ட்ரம்ப், இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நட்பு நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்யும் என்றார். தங்களது நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், ராணுவ ரீதியாகவே இதற்குத் தீர்வு காணத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் பேசினார். இந்தப் போர் நடவடிக்கை விரைவில் ஒரு சுமூகமான முடிவை எட்டும் என்றும், அமெரிக்கா தனது இலக்குகளில் இருந்து பின்வாங்காது என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

