மும்பை அருகே உள்ள விரார் பகுதியில் இயங்கி வரும் பிரபல 'பார்பிகியூ நேஷன்' உணவகத்திற்கு ஆகஸ்ட் 19 அன்று யாஷ் ராவத் என்பவர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் விருந்திற்காகச் சென்றுள்ளார்.
அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘டெசர்ட்’ பிளேட்டில் கரப்பான் பூச்சி ஒன்று ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து உணவக ஊழியர்களிடம் முறையிட்ட போது அவர்கள் அந்தத் தட்டை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் அக்கடையில் சமையலறை தரைப்பகுதியும் மிகவும் அசுத்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைப் படம்பிடித்த யாஷ் ராவத், “அதிகக் கட்டணம் வசூலிக்கும் உணவகத்தில் பூஜ்ஜிய அளவிலான சுகாதாரமே உள்ளது” எனக் குறிப்பிட்டு ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இப்புகாரை ஏற்றுக் கொண்ட எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிகாரிகள், முறையான செயலி வாயிலாகப் புகார் அளிக்குமாறும், அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மற்றும் ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

