ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது போரைத் தொடங்கின.
இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கமேனியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த இஸ்ரேல் உளவுத்துறை, மிகத் துல்லியமாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவான வளைகுடா நாடுகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈரான் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாகவும், அங்கு புதிய அரசு அமைந்துவிட்டதால் இன்னும் இரண்டு வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இருப்பினும், கள நிலவரம் வேறாக உள்ளது. பாரசீக வளைகுடா பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் சக்திவாய்ந்த A-10 WARTHOG ரகத் தாக்குதல் விமானத்தை ஈரானியப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் F-15E போர் விமானம் ஒன்றும் ஈரானிய ராணுவத்தால் வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்களின் விமானிகளை உயிருடன் பிடிக்க உதவுபவர்களுக்குப் பெரிய அளவிலான சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “விமானிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விலைமதிப்பற்ற வெகுமதிகளும், சன்மானமும் வழங்கப்படும்” என ஈரான் தேசியத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா போர் முடிவுக்கு வருவதாகக் கூறினாலும், ஈரானின் இந்தத் தொடர் அதிரடி நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

