கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் முக்கியச் சட்டசபை மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், வரும் 2029 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக கூட்டணி ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தும் கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகும் எனத் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தான் அடுத்த பிரதமர் என்று தவெக அமைச்சர்களும், சமூக வலைத்தள இன்புளூயன்சர்களும் தொடர்ந்து பேசி வரும் சூழலில், அமைச்சர் ராஜேஷ்குமாரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு எப்போதும் தாம் தெளிவாகப் பதிலளித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தவொரு தனிநபரை விடவும் காங்கிரஸ் கட்சியும் அதன் கொள்கைகளுமே தங்களுக்கு முதன்மையானது என்றும், கட்சியின் தலைமையின் முடிவுக்குத் தொண்டர்கள் அனைவரும் முழுமையாகக் கட்டுப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. இந்த கூட்டாட்சி அமைப்பில் காங்கிரஸ் தரப்பிற்கு இரு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. எனினும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கடைநிலைத் தொண்டனின் முகமாகத் திகழும் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், இதற்கு தவெக உடன்படாத பட்சத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் அடுத்த நிமிடமே தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
அமைச்சர் பதவி என்பது தங்களுக்குப் பெரிதல்ல என்றும், இந்த இயக்கமும் கட்சியுமே தங்களை உயர்த்திய தூண்கள் என்றும் பேசிய ராஜேஷ்குமார், ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதே கட்சியின் ஒரே இலக்கு என்பதைத் தெளிவுபடுத்தினார். தவெக அமைச்சரவையில் நீடிப்பதை விடக் கட்சியின் கொள்கையும் அகில இந்தியத் தலைவரின் தலைமையுமே முக்கியம் என அவர் அறிவித்திருப்பது, தவெக – காங்கிரஸ் கூட்டணியின் எதிர்கால உறவில் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.

