தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காகப் பரப்புரை மேற்கொள்ளும் 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட தேசிய அளவிலான முக்கியத் தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர். இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் எனப் பல முக்கியப் பெயர்கள் இடம்பெற்றுள்ளது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்தப் பரப்புரையாளர்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக, அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இருப்பினும், கட்சியின் வெற்றிக்காகத் தான் முழுவீச்சில் களப்பணியாற்றப் போவதாக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், தற்போது நட்சத்திரப் பேச்சாளராக அவர் அறிவிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் எல். முருகன் உள்ளிட்ட 10 மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் சூறாவளிப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களுடன் யோகி ஆதித்யநாத், ஹிமாந்த பிஸ்வ சர்மா போன்ற 6 மாநில முதல்வர்களும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவிலான தலைவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எச். ராஜா ஆகியோரும் கூட்டணிக் கட்சிகளுக்காக வாக்கு சேகரிக்க உள்ளனர்.
திரைத்துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களான சரத்குமார், குஷ்பு, நமீதா, கஸ்தூரி, மதுவந்தி மற்றும் புரட்சி கவிதாசன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்து பரப்புரையை சுவாரசியமாக்க உள்ளனர். அதேவேளையில், நடிகை ராதிகா, வினோஜ் பி. செல்வம் மற்றும் கே.டி. ராகவன் போன்ற முக்கியப் பெயர்கள் இந்தப் பட்டியலில் விடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியிருப்பினும், இந்த நட்சத்திரப் பட்டாளத்தின் வருகை தமிழகத் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

