விருதுநகர் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், தான் திருச்சுழி தொகுதியில் போட்டியிட வேட்புமனு அளிக்கவில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரனின் தலையீடு காரணமாகவே தனக்கு மீண்டும் சாத்தூர் தொகுதி வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகளில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து, பின்னர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பிய ராஜவர்மன், தற்போது சசிகலாவின் ‘அனைந்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில்’ (AIPTMMK) இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சுழி தொகுதியில் வலுவான வேட்பாளரான அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்துப் போட்டியிட ராஜவர்மனை அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், அவரது இந்த திடீர் முடிவு மற்றும் கட்சித் தாவல் செய்தி தென் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

