மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு ஆறுகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், அஹில்யாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அவினாஷ் என்பவர் தனது மனைவி மாதவி மற்றும் இரண்டு மகள்களுடன் காரில் பயணிக்கையில், தர்வா பகுதி குப்தி ஆற்றுப் பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளத்தின் வேகத்தைக் கணிக்கத் தவறி காரை இயக்கினார். இதனால் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், அவினாஷ் ஒரு மரத்தைப் பற்றி உயிர் தப்பிய நிலையில், அவரது மனைவியும் இரு மகள்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்; தீவிரத் தேடுதலுக்குப் பின் அண்டை மாவட்டமான யவத்மாலில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் பெய்த இந்தத் தீவிர மழையால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டு வருகின்றனர்.
இப்பெருமழையின் காரணமாக மாநில அரசுக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

