மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்கக் கோரி ஈரான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான மற்றும் ஆவேசமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஈரானை விமர்சித்துள்ளார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கியுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்த ஆக்ரோஷமான பதிவு வெளியாகியுள்ளது.
“அந்த பாழாய்ப்போன ஜலசந்தியைத் திறங்க பைத்தியக்கார பயலுகளா, இல்லையெனில் நீங்கள் நரகத்தை அனுபவிக்க நேரிடும்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், அன்றைய தினத்தை “மின் நிலைய நாள் மற்றும் பாலங்கள் நாள்” (Power Plant Day and Bridge Day) என அவர் வர்ணித்துள்ளார். ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதையே ட்ரம்பின் இந்த ‘கெடுபிடி’ எச்சரிக்கை உணர்த்துகிறது.
சுமார் 48 மணி நேர காலக்கெடுவை ஈரானுக்கு வழங்கியுள்ள ட்ரம்ப், அதற்குள் சுமூகமான உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், மற்றொருபுறம் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த முரண்பட்ட மற்றும் ஆவேசமான அணுகுமுறை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.

