உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த ஷம்புத்யாயல் கோரி என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், இன்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஷம்புத்யாயல், தனது மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவி பலத்த காயமடைந்தார்.
மனம் போன போக்கில் செயல்பட்ட ஷம்புத்யாயல், தனது ஆத்திரம் தீராத நிலையில் 9 மாதமே ஆன தனது பச்சிளம் குழந்தையை என்றும் பாராமல் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ஷம்புத்யாயலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. குடும்பச் சண்டையில் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

