மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது ஜெகதீஷ் தாபர், தனது முதல் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைப் பிரிந்து, ரீமாபாய் என்ற 25 வயது பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு உணவின் போது ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் பெரும் மோதலாக வெடித்ததில், ஆத்திரமடைந்த ஜெகதீஷ் வீட்டில் இருந்த மரக்கட்டையால் ரீமாபாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகும் எவ்வித பதற்றமும் இன்றி, மனைவியின் உடலை கட்டிலில் கிடத்திவிட்டு அதன் அருகிலேயே ஜெகதீஷ் நிம்மதியாகப் படுத்து உறங்கியுள்ளார். சுமார் இரண்டு நாட்களாக அழுகிய நிலையில் இருந்த பிணத்துடன், தனது இரண்டு குழந்தைகளையும் அதே வீட்டில் வைத்து அவர் குடும்பம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் யாருக்கும் தெரியாமல் உடலை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில், துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் சந்தேகம் அடைந்த ஜெகதீஷின் தந்தை இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ரீமாபாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சடலத்துடன் இரண்டு நாட்கள் வாழ்ந்த ஜெகதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருவேளை உணவிற்காக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்து, பச்சிளம் குழந்தைகளைத் தாய் இல்லாத நிலைக்குத் தள்ளிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

