மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அர்பாஸின் காதலியான மெஹ்ஜபீன் ஷேக் என்பவரே இந்த கொடூரச் செயலுக்கு முக்கியக் சூத்திரதாரியாகச் செயல்பட்டுள்ளார். அர்பாஸிடம் இருந்த பணத்தைப் பறிக்கும் நோக்கில், அவரை மும்பையின் வெர்சோவா பகுதிக்கு வருமாறு மெஹ்ஜபீன் நயமாகப் பேசி வரவழைத்துள்ளார்.
வெர்சோவா பகுதிக்கு வந்த அர்பாஸை, மெஹ்ஜபீன் தனது கணவர் ஹசன் மற்றும் சகோதரர் தாரிக் ஆகியோருடன் இணைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அர்பாஸ் உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை மறைக்கும் நோக்கில் ஒரு ட்ரம்மில் அடைத்து சாக்கடையில் வீசியுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், சாக்கடையில் இருந்து அர்பாஸின் உடலைக் கண்டெடுத்தனர். இது தொடர்பாக மெஹ்ஜபீன் ஷேக் மற்றும் அவரது சகோதரர் தாரிக் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது தலைமறைவாக உள்ள மெஹ்ஜபீனின் கணவர் ஹசன் மற்றும் இதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றொரு நபரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சட்டப்படி இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

