பிஃஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜெண்டினாவிற்கு எதிரான ஆட்டத்தில், எகிப்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
ஆட்டத்தின் 78 நிமிடங்கள் வரை 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்த எகிப்து அணி, கடைசி நிமிடங்களில் ஆட்டத்தை பறிகொடுத்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தத் தோல்வி எகிப்து வீரர்களின் திறமையின்மையால் ஏற்பட்டதல்ல, மாறாக நடுவர்கள் மற்றும் விஏஆர் தொழில்நுட்பத்தின் ஒரு சார்பான முடிவுகளால் அரங்கேற்றப்பட்ட அநீதி என்று எகிப்து பயிற்சியாளர் ஹசன் மற்றும் கால்பந்து ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே எகிப்து அணிக்கு நிர்வாக ரீதியாகவும், களத்திற்கு வெளியேயும் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஹோட்டலில் இருந்து மைதானத்திற்குப் புறப்படும் போது எகிப்து வீரர் ஒருவர் சிறுவனுடன் செல்ஃபி எடுக்க முயன்றதை பாதுகாப்பு அதிகாரி தடுத்ததும், அதனால் பயிற்சியாளர் ஹசனுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலும் அணியினரை மனரீதியாகப் பாதித்துள்ளது. களத்திலும் நடுவர்களின் செயல்பாடுகள் அர்ஜெண்டினா அணிக்கு மட்டுமே சாதகமாக இருந்ததாக எகிப்து தரப்பு வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறது.
ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது எகிப்து வீரர் முஸ்தபா ஸிகோ அடித்த இரண்டாவது கோல் விஏஆர் மூலம் ரத்து செய்யப்பட்டதுதான். எகிப்து அணி தனது பகுதியில் இருந்து தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்தின் 75-100 யார்டுகளுக்கு அப்பால் நடந்த ஒரு சிறிய ஃபவுலைக் (foul) காரணம் காட்டி இந்த கோல் மறுக்கப்பட்டது. இவ்வளவு தூரத்திற்கு முந்தைய, ஆட்டத்தின் போக்கை பாதிக்காத ஒரு நிகழ்வை விஏஆர் கையில் எடுத்து கோலை ரத்து செய்தது எகிப்து வீரர்களை கொந்தளிக்கச் செய்தது. அதைவிடக் கொடுமையாக, இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் எகிப்து வீரர் ஹம்டி ஃபாத்தியை அர்ஜெண்டினாவின் மேக் அலிஸ்டர் பாக்ஸிற்குள் சட்டையை இழுத்து கீழே தள்ளியதற்கும் பெனால்டி மறுக்கப்பட்டதுடன், அதை விஏஆர் சோதிக்கக் கூட நடுவர்கள் முற்படவில்லை.
மறுபுறம் எகிப்து வீரர்களான முஸ்தபா ஷோபீர், ஹம்டி ஃபாத்தி, மரவான் அத்தியா மற்றும் நியாயம் கேட்கச் சென்ற பயிற்சியாளர் ஹசன் ஆகியோருக்கு அடுத்தடுத்து மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆனால், அதே போன்ற தவறுகளை அர்ஜெண்டினா வீரர்கள் செய்தபோது நடுவர் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எகிப்து வீரர் இமாம் முகத்தில் அர்ஜெண்டினா வீரர் குத்தியும் நடுவர் கண்டுகொள்ளாதது இந்தத் தொடரின் நடுநிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவைத் தக்கவைக்கவும், நட்சத்திர வீரர் மெஸ்ஸி தொடர்ந்து ஆட வேண்டும் என்பதற்காகவுமே ஃபிஃபா இப்படி ஒரு பாரபட்சமான அநீதியை இழைத்துள்ளதாக எகிப்து கேப்டன் முகமது சாலா உட்பட ஒட்டுமொத்த எகிப்து அணியும் தங்களின் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.

