நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நடைபெற்ற நடிகர் விஜய்யின் பரப்புரைப் பயணத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி விஜய்யின் பரப்புரை வாகனம் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் உற்சாகத்துடன் அணிவகுத்து வந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து நான்கு விபத்துகள் நிகழ்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் மொத்தம் ஐந்து விபத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தது உட்பட மொத்தம் 16 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொடர் விபத்துச் சம்பவங்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் விஜய் தரப்பினரிடையே மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளன.

