தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் வேட்புமனுவில் சொத்து மதிப்பு விவரங்கள் தொடர்பாக பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரது மனு முறைப்படி ஏற்கப்பட்டது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சை வேட்பாளரான முரளி வினோத் என்பவர் ஆதவ் அர்ஜுனாவின் மனுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது பிரமாணப் பத்திரத்தில் ஆதவ் அர்ஜுனா தனது மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களின் பெயர்களை மறைத்துவிட்டதாகவும், மேலும் அவரது கைவசம் உள்ள 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் குறித்த விவரங்களில் குளறுபடி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த புகாரால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
வேட்புமனுவில் சொத்து மற்றும் நிறுவன விவரங்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவரது மனுவை உடனடியாக ஏற்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இது குறித்து முடிவெடுக்க தேர்தல் பார்வையாளரின் வருகைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஒருவேளை குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளதால், வில்லிவாக்கம் தொகுதி தேர்தல் களம் தற்போது பெரும் பதற்றத்தில் உள்ளது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், இந்த மனு பரிசீலனை முடிவு தவெக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

