தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டங்களில், தேர்தல் வியூக ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்று வருவது ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் நண்பர் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரின் இந்த ஆதிக்கத்தைக் கண்டித்து திமுக, அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளன. ஏற்கனவே விஜய்யின் தனிச்செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனத்திலேயே பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் சூழலில், இவர்களின் தலையீடு தவெக அரசுக்கு கூடுதல் தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில், திரைமறைவில் இருந்து செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, தற்போது தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து நேரடி அரசியலில் ஈடுபட தீவிரமாகக் காய் நகர்த்தி வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படாத 'துணைத் தலைவர்' என்ற முக்கியப் பொறுப்பைக் கைப்பற்ற அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதல்வர் விஜய் தற்போது முழுமையாக அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருவதால், தனக்கு மிகவும் நம்பிக்கையான ஜான் ஆரோக்கியசாமியிடம் கட்சியின் முக்கியப் பொறுப்பை ஒப்படைத்தால் தவெகவின் உட்கட்டமைப்பு இன்னும் பலமாகும் என்று அவர் நம்புவதாகத் தெரிகிறது.
தற்போது தவெகவில் தலைவராக விஜய்யும், பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்தும் பொறுப்பில் உள்ள நிலையில், அவர்களுக்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். விஜய் ஆட்சிப் பணிகளில் பிஸியாக இருப்பதால், கட்சி விவகாரங்கள் பெரும்பாலும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. இந்தச் சூழலில், ஜான் ஆரோக்கியசாமி கட்சிக்குள் நேரடியாக நுழைவதை ஆதவ் அர்ஜுனா தரப்பு சிறிதும் ரசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே தவெகவிற்குள் பல்வேறு மட்டங்களில் உட்கட்சிப் பூசல் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், ஜான் ஆரோக்கியசாமியின் இந்தத் திடீர் என்ட்ரி கட்சியின் தலைமைப் பொறுப்பிலேயே கடுமையான அதிகார மோதலை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே ஜான் ஆரோக்கியசாமியை கட்சிக்குள் கொண்டு வந்து, முக்கியப் பொறுப்பில் அமர வைக்கும் அதிரடி முடிவை விஜய் எடுக்கக்கூடும் என்றே தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

