லக்னோவில் தனது மருமகளை மூன்று நாட்களாக அறையில் சிறைவைத்து, தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ரயில்வே பொறியாளரான முகேஷ் குமார் திவாரி (58) என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த இவர், ஆலம்பாக்கில் உள்ள ரயில் பெட்டி பழுது பார்க்கும் பட்டறைக்கு அருகே நடமாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கடந்த 2023 நவம்பரில் முகேஷ் குமாரின் மகன் அபிஷேக் திவாரியுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான முதல் நாளிலிருந்தே அந்தப் பெண் வரதட்சணைக் கொடுமை, உடல்ரீதியான தாக்குதல் மற்றும் கட்டாய மது அருந்துதல் போன்ற சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளார். கடந்த 2024 ஏப்ரல் மாதம், பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பிய அந்தப் பெண்ணுக்கு, மாமனார் முகேஷ் குமார் குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மூன்று நாட்கள் அறையில் அடைத்து வைத்துத் துன்புறுத்தியுள்ளார். பின்னர் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி அப்பெண் காவல்துறையைத் தொடர்புட்டு மீட்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, தனது கணவர் மற்றும் நாத்தனார்களின் நண்பர்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் தன்னை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதாகவும், இதுகுறித்து மாமனாரிடம் முறையிட்டபோது அது “பணக்காரர்களின் பொழுதுபோக்கு” எனக் கூறி அவர் அலட்சியப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் வரதட்சணைக் கொடுமை மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், விசாரணையின் போது கிடைத்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை பிரிவுகள் சேர்க்கப்பட்டு, தற்போது மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

