மஹாராஷ்டிராவின் வாசிம் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருட வந்த ஐந்து முகமூடி அணிந்த நபர்களை, ஒரு பெண்ணே தனி ஆளாக தைரியமாக எதிர்த்துத் துரத்திய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கோபால் ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் லாக்கரை அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த துணிச்சலான பெண்மணி, எந்தவித பயமுமின்றி கற்களைக் கொண்டு அந்தத் திருடர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தலைமறைவான திருடர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்களின் சதியை முறியடித்த அந்தப் பெண்ணின் அசாத்தியமான தைரியத்திற்கும் சாகசத்திற்கும் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

