அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நிலவும் குளறுபடிகள் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி ஆகியோரின் மத்தியஸ்தத்திற்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானும் இரண்டு வார காலத்திற்குத் தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக உறுதி அளித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என்றும், இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களைத் தவிர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகளில், யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான விவகாரம் தான் தற்போது பெரும் முரண்பாடாக உருவெடுத்துள்ளது. ஈரான் வெளியிட்ட ஃபார்சி மொழி அறிக்கையில், “அமெரிக்கா தங்களின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை ஏற்க வேண்டும்” என்ற நிபந்தனை இடம்பெற்றுள்ளது. ஆனால், அதே சமயம் ஈரான் வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் இந்த முக்கியமான அம்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பைத் தடுக்கவே போர் தொடுத்ததாகக் கூறும் அமெரிக்காவைச் சம்மதிக்க வைக்க ஈரான் மேற்கொண்ட இந்த இரட்டை நிலைப்பாடு இராஜதந்திர ரீதியாகக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் 10 அம்ச திட்டத்தில் யுரேனியம் செறிவூட்டல் தவிர, ஈரான் மீதான முதன்மை மற்றும் இரண்டாம் கட்ட பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்கப் படைகளை முழுமையாக வெளியேற்ற வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈரானுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், லெபனானுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களை டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்வதாக மட்டுமே கூறியுள்ளதே தவிர, அதிகாரப்பூர்வமாக எதற்கும் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த போர் நிறுத்தம் பிராந்திய அமைதிக்கு வழிவகுக்கும் என்று ஒருபுறம் நம்பப்பட்டாலும், அமெரிக்காவின் பிடிவாதமான நிலைப்பாடும் ஈரானின் நிபந்தனைகளும் மோதல் மீண்டும் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகளையே காட்டுகின்றன. ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக முடக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக, யுரேனியம் செறிவூட்டலை டிரம்ப் ஒருபோதும் ஏற்க வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இந்த போர் நிறுத்தம் ஒரு நிரந்தர தீர்வா அல்லது அடுத்தக்கட்டப் போருக்கான ஆயத்தமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

