Dailyhunt
ஈரான் கண்ணில் மண்ணைத் தூவிய சிஐஏ. ஹாலிவுட் பட பாணியில் ஒரு மிஷன். அமெரிக்கா செய்த 'மாஸ்' ஆபரேஷன்.!

ஈரான் கண்ணில் மண்ணைத் தூவிய சிஐஏ. ஹாலிவுட் பட பாணியில் ஒரு மிஷன். அமெரிக்கா செய்த 'மாஸ்' ஆபரேஷன்.!

Tamizhan media 6 days ago

ரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹாலிவுட் பட பாணியில் ஈரானின் எல்லைக்குள் புகுந்து அமெரிக்கா தனது போர் விமானியை மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 (F-15) போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளில் ஒருவர் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரரை மீட்பது அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக இருந்தது. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள சூழலில், அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இந்த அதிரடி மீட்பு நடவடிக்கை அரங்கேறியுள்ளது.

இந்த மீட்பு ஆபரேஷனுக்காக அமெரிக்கா தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது. சிஐஏ (CIA), பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஈரானிய மலைப்பகுதிகளில் மறைந்திருந்த விமானியின் இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டறிந்தன. நூற்றுக்கணக்கான விமானங்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் கண்காணிப்புகள் தீவிரமாக இருந்த ஏவுகணை தாக்குதல் பகுதிக்குள்ளேயே புகுந்து அமெரிக்கப் படைகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளன.

ஈரானியப் படைகளின் பிடியில் சிக்காமல் இருக்க அந்த அமெரிக்க விமானி இரவு பகலாக மலைப்பகுதிகளில் மறைந்து பயணித்துள்ளார். அவரை மீட்பதற்காக அமெரிக்கா HH-60W ‘ஜாலி கிரீன் II’ ஹெலிகாப்டர்கள், A-10 வார்தாக் தாக்குதல் விமானங்கள் மற்றும் F-35 ரக மறைவு போர் விமானங்களை களம் இறக்கியது. மீட்புப் பணியின் போது ஈரானிய கன்வாய்கள் விமானியை நெருங்காமல் இருக்க அமெரிக்க விமானங்கள் இடைவிடாது குண்டுமழை பொழிந்தன. இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்த போதிலும், அமெரிக்கச் சிறப்புப் படையினர் திட்டமிட்டபடி பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மூலம் அந்த வீரரை பத்திரமாக மீட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையானது அமெரிக்காவின் ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் மீட்புப் படைத் திறனை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. ஒரு பக்கம் ஈரான் தனது வான் எல்லையைப் பாதுகாப்பதாகக் கூறி வரும் நிலையில், அதன் மூக்கிற்கு அடியிலேயே புகுந்து அமெரிக்கா தனது வீரரை மீட்டது ஈரானுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் அடர்த்தியாகச் சூழ்ந்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media