அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரான் நாட்டுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து விடுவதற்கு அல்லது ஒரு சுமூகமான ஒப்பந்தத்திற்கு வருவதற்கு ஈரான் அரசுக்கு தாம் வழங்கிய 10 நாட்கள் அவகாசம் முடியப்போவதைச் சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், இன்னும் 48 மணி நேரமே எஞ்சியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த காலக்கெடுவிற்குள் ஈரான் இணங்காவிட்டால், அந்நாட்டின் மீது “நரகம் பொழியத் தொடங்கும்” என அவர் மிகத் தீவிரமாக எச்சரித்துள்ளார். இது ஈரான் மீதான அமெரிக்காவின் நேரடி வான்வழித் தாக்குதலுக்கான இறுதி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்த இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல்களை முன்னெடுத்தாலும், ஈரானின் பதிலடி அமெரிக்காவுக்கு எதிர்பாராத சவால்களை அளித்துள்ளது.
இந்நிலையில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற உள்நாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில், ஈரானை முழுமையாகப் பணிய வைக்கவே டிரம்ப் இத்தகைய “நரகத்தைக் காட்டுவோம்” என்ற ஆக்ரோஷமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.

