தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, அதிமுக பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்கு அவர் கடும் மறுப்பு தெரிவித்தார். தாங்களோ அல்லது தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளோ யாருக்கும் அடிமை கிடையாது என்றும், தமிழக மக்களின் நலனுக்காகவும் நியாயத்திற்காகவும் எப்போதும் உறுதியுடன் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்திற்கு எதிராக எந்தத் திட்டங்கள் வந்தாலும், அவை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதிமுக அதனை அனுமதிக்காது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாநிலத்தின் நன்மைக்காகவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனத் தெரிவித்த அவர், தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் தங்களின் நிலைப்பாடு எப்போதும் சமரசமற்றது என்பதை வலியுறுத்தினார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுகவின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியபோது, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதே அதனை எதிர்த்ததாகக் கூறினார். குறிப்பாக, விவசாயிகளின் நலனுக்காக 37 அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கிப் போராடியதை நினைவுகூர்ந்த அவர், மக்கள் பிரச்னைகளுக்கே அதிமுக எப்போதும் முதலிடம் கொடுக்கும் என்று தனது உரையில் பேசினார்.

