தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் திமுக பின்னடைவைச் சந்தித்ததுடன், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியைத் தழுவியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலில் கோலோச்சிய ஒரு முக்கியத் தலைவர், தனது கோட்டையிலேயே தோல்வி அடைந்தது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
இந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், தங்களது வருத்தத்தை நூதன முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். பழனி அடிவாரத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மோகன்ராஜ், முத்துக்குமார் மற்றும் காளிமுத்து ஆகியோர் நேற்று பூங்கா ரோடு பகுதியில் திரண்டு, தங்கள் தலைவரின் தோல்விக்காக மொட்டை அடித்துக் கொண்டனர். பின்னர், “எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெல்வார்” என உணர்ச்சிப்பொங்க கோஷமிட்டு தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

