ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று ஈரானிய எல்லைக்குள் நுழைந்த இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை ஈரான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது.
இதில் ஒரு விமானம் முற்றிலும் சிதைந்ததால் அதன் விமானி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மற்றொரு விமானத்தில் இருந்த இரு விமானிகளில் ஒருவரை மட்டும் அமெரிக்க மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். காணாமல் போன மற்றொரு விமானியைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில், அந்த விமானியின் தாயார் தனது மகனின் நிலை குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருந்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விமானியியின் தாயாரின் கவலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரகம் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதில் செய்தி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “உங்கள் மகன் டொனால்ட் டிரம்ப் கையில் இருப்பதை விட, ஈரான் வசம் கைதிகளாக இருப்பதே அவர்களுக்குப் பாதுகாப்பு. அமெரிக்க மீட்புக் குழுவினரிடம் சிக்காமல், அவர்கள் ஈரானிடம் பிடிபட வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்; கைதிகளைக் கண்ணியத்துடன் நடத்த எங்களுக்குத் தெரியும்” என்று ஈரான் தூதரகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தலைமையின் கீழ் இருப்பதை விடத் தங்கள் நாட்டில் கைதியாக இருப்பது பாதுகாப்பானது என ஈரான் கூறியிருப்பது போர்க்களத்தில் நிலவும் கசப்பான உறவை வெளிப்படுத்துகிறது.
இதேபோல, தென்னாப்பிரிக்காவுக்கான ஈரான் தூதரகமும் அமெரிக்காவைச் சாடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. “மனிதநேயச் சட்டங்கள் சர்வதேச அளவில் எழுதப்படுவதற்கு முன்பே, கைதிகளின் உரிமைகளை முறையாக வரையறுத்த நீண்டகால நாகரிகம் எங்களுடையது. அமெரிக்காவைப் போல நாங்கள் கற்காலத்தில் வாழவில்லை” என்று ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பிடிபடும் அமெரிக்க விமானிகள் சர்வதேசப் போர் விதிகளின்படி மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார்கள் என்பதை ஈரான் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து வரும் இந்த ஈரான்-அமெரிக்கப் போரில் இதுவரை 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 13 அமெரிக்கர்களும், 19 இஸ்ரேலியர்களும் அடங்குவர்; மற்றவர்கள் அனைவரும் ஈரானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போரில் இதுவரை 7 போர் விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் இஸ்ரேலியக் கப்பல்களை ஈரான் குறிவைத்துத் தாக்குவது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முடிவில்லாத இந்த மோதல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

