தமிழகத்தைப் பொறுத்தவரை 28 மாவட்டங்களின் வாழ்வாதாரமும், மாநிலத்தின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 50 விழுக்காடும் காவிரி நீரை நம்பியே இருக்கின்றன.
இத்தகைய சூழலில், தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா அறிவித்திருப்பது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தங்கள் மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழை வலுவிழந்ததால் போதிய மழை இல்லை என்றும், தன்னிச்சையாகத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் மழுப்பியுள்ளார். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைப் பின்பற்றுவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், மேகதாது அணைத் திட்டம் வறட்சி காலங்களில் இரு மாநிலங்களுக்கும் பயன்படும் என்றும், பெங்களூரின் குடிநீர் மற்றும் கர்நாடக விவசாயிகளின் நலனைக் கருதியே தாங்கள் செயல்படுவதாகவும் கூறி, அணை கட்டும் முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், கர்நாடக அமைச்சரின் இந்த பேச்சுக்குத் தமிழக விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கொந்தளிப்பும் உருவாகியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி ஜூன் மாதத்திற்கு 9.91 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கு 32 டிஎம்சி எனத் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் தண்ணீர் திறக்கிறோம் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் தண்ணீர் தர முடியாது என முரண்பாடாகப் பேசும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து” நாடகமாடுகிறார் என்று விவசாயிகள் சாடியுள்ளனர். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் கர்நாடகா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவது, இரு மாநிலங்களுக்கு இடையேயான சுமுக உறவை மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.

