இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு குடிமகனின் அங்கீகாரத்திற்குப் பிறப்புச் சான்றிதழே அடிப்படை ஆதாரமாக மாறியுள்ளது.
மத்திய அரசின் ‘பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தச் சட்டம்)’-ன் கீழ், இனி பிறப்புச் சான்றிதழ் என்பது ஒற்றை ஆவணமாகச் செயல்படும். எனவே, குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் வாங்கும்போதே பெயருடன் இனிஷியல் (Initial) சேர்த்து வாங்குவது மிகவும் அவசியம். இதில் இனிஷியல் இல்லை என்றால், அதன் தொடர்ச்சியாக எடுக்கப்படும் ஆதார் கார்டிலும் இனிஷியல் இடம்பெறாது. இது பிற்காலத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அனைத்து அரசு ஆவணங்களிலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர், பாலினம் மற்றும் பெற்றோர் பெயர் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆதார் அட்டைக்கும் பான் (PAN) கார்டுக்கும் இடையிலான இணைப்பு தற்போது மிக முக்கியமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆதாரில் உள்ள பெயரும் பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயரும் 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய எழுத்துப்பிழை அல்லது இனிஷியல் மாற்றம் இருந்தாலும் விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும். குறிப்பாக, 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்குத் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இல்லாத பட்சத்தில் அவர்களால் பான் கார்டு பெற முடியாது என்ற நடைமுறைச் சிக்கல் உருவாகியுள்ளது.
ஒரே நபர் பல்வேறு பெயர்களிலோ அல்லது தவறான பிறந்த தேதிகளைக் கொடுத்தோ பல பான் கார்டுகளைப் பெறுவதைத் தடுக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும் வருமான வரித்துறை இந்த கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதில் திருத்தங்கள் செய்ய விரும்பினாலும் இனி பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் உங்கள் குழந்தையின் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற எவ்வித ஆவணங்களைப் பெறுவதற்கும் பிறப்புச் சான்றிதழே அஸ்திவாரம் என்பதை உணர்ந்து, அதனைத் தொடக்கத்திலேயே பிழையின்றிப் பெறுவது புத்திசாலித்தனமாகும்.

